ரூ.43 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருட்டு போன அனைத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியில் பிஸ்மி வேர்ல்ட் என்ற செல்போன் விற்பனையகத்தில் ஜூலை 16-ம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் கடையில் புகுந்து அனைத்து செல்போன்களையும் திருடி சென்றனர். திருட்டு குறித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் 4 குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவர் என 4 பேரை பிடித்துள்ளோம். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களிடமிருந்து திருடு போன 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 234 புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று தகவல் தெரிவித்தார்.






