ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இபிஎஸ் கடும் கண்டனம்

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் திமுக அரசு அடிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பால் விலை…

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் திமுக அரசு அடிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

நெய்விலையை தொடர்ந்து தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ.52ல் இருந்து 55 ஆகவும், 500 கிராம் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/EPSTamilNadu/status/1603989846921732097

 

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டா கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ௹.20 உயர்த்தியுள்ளனர்.

எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.