சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்கேன் நிறுவனமாக இயங்கி வரும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் கோவில்பட்டி மற்றும் சென்னையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனர் கோவிந்தராஜின் இல்லம், மற்றும் சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, கீழ்பாக்கம் உட்பட 10க்கும்
மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் அதிகளவு ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் நிறுவனத்திற்கு கிடைத்த பெருமளவிலான வருவாயில் வரிஏய்ப்பு நடந்துள்ளதா என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல நிறுவனம் ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் சோதனைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.








