விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வில் எந்திரன் பட பாணியில் முறைகேடு செய்ததாக ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில், இரண்டு தேர்வு மையங்களில் இருந்து இரண்டு பேர் முறைகேடு செய்து காவல்துறையிடம் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுமித் குமார் மற்றும் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைபேசியைப் பயன்படுத்தி, வினாத்தாளைப் படம் பிடித்து அடையாளம் தெரியாத நபர்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சுமித் மற்றும் சுனில் இருவரும் கண்காணிப்பாளர்களிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த புளுடூத் ஹெட்செட் மூலம் பதில்களை பெற்றுள்ளனர். அவர்களின் ஏமாற்றுதல் ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.
ஆனால் ஹரியானாவில் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மூலம் பெறப்பட்ட தகவலின்பேரில் இருவரும் பிடிபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியானாவைச் சேர்ந்த பயிற்சி மைய ஆபரேட்டர் என்றும், போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.







