சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!

புலிகள் காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன்…

புலிகள் காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன் உயிரை காத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புலி மற்றும் சிறுத்தை இரண்டுமே ஆக்ரோஷமாக வேட்டையாடும் விலங்குகள். இருந்தும் அவைகள் வேட்டையாடும் போது வெவ்வேறு வித யுக்திகளை பயன்படுத்தி தனது இரையை பிடிக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சிறுத்தை மற்றும் புலிகள் ஆகிய இரண்டுமே பெரும்பாலும் ஒரே பகுதிகளில் வசிக்கும் விலங்குகளாக இருக்கின்றன. இரை
தட்டுப்பாடு இல்லாத காலங்களில் இரு விலங்குகளுமே பெரிய அளவிலான மோதலை சந்திக்காமல் இருந்தாலும், இரை தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் புலிகள் இரையைப் பெறுவதற்கான முயற்சியில் சில சமயம் சிறுத்தைகளையும் வேட்டையாடுமாம்.

அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய வன சேவை அதிகாரி சுசந்த
நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புலி திடீரென மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று எதிரே இருந்த சிறுத்தையை பிடிக்க முயல்கிறது. அப்போது புலியை கண்டு அதிர்ச்சியான சிறுத்தையோ உயிருக்கு பயந்து வேகமாக மரத்தில் ஏறி தப்பிக்கிறது. ஆனாலும், விடாமல் புலி அதே வேகத்தில் மரத்தில் ஏறி சிறுத்தையை பிடிக்க முயன்றபோதும், அதன் முயற்சி எடுபடவில்லை. இதனால் பாதி தூரம் வரை மட்டுமே ஏறிய புலி மரத்தில் இருந்து மெல்ல கீழே இறங்குகிறது.

இந்த பரபரப்பான 30 விநாடி விடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா பகிரும்போது ”இப்படித்தான் புலிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்பில் சிறுத்தை உயிர் வாழ்கிறது, புலிகள் எளிதில் மரங்களில் ஏற முடியும், அவற்றின் கூர்மையான மற்றும் உள்ளிழுக்கும் நகங்கள் மரத்தின் தண்டுகளைப் பிடித்து மேலே ஏறுவதற்கு சக்திவாய்ந்த பிடியை
கொடுக்கிறது. ஆனால், வயதாகும் போது புலிகளின் உடல் எடை காரணமாக ஏற முடியாமல் தடையாக மாறிவிடும். அதனால், உயிர் வாழ மெலிதாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி வித்யாசமான வாக்கியத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த பரபரப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.