தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!!

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தாம்பரம் மாநகரக் காவல்…

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரக சரகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்
காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் இயங்கி வருகிறது. சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்காகவும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காகவும், தவறான பாதையில் செல்லாமல் இருப்பதற்காகவும் காவல்துறை சார்பில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கண்ணகி நகர், செம்மஞ்சேரி,
பெரும்பாக்கம், சிட்லப்பாக்கம், கானத்தூர், மணிமங்கலம், பல்லாவரம்,
குரோம்பேட்டை, தாம்பரம், படப்பை உள்ளிட்ட 14 பகுதிகளை சேர்ந்த காவல் சிறார்
மற்றும் சிறுமியர் மன்றத்திற்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் கபடி, கால்பந்து, கைப்பந்து, தடகளம் ஆகியவை நடத்தப்பட்டன.

ஆண், பெண் என இரு பிரிவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 439 சிறார் ,சிறுமியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கபடி, கைப்பந்து, தடகளம் ஆகிய போட்டிகளில் கண்ணகி நகர் காவல் சிரார் மன்றம் முதல் பரிசைத் தட்டி சென்று அசத்தியது. கால்பந்தில் மட்டும் பள்ளிக்கரணை காவல் சிரார் மன்றம் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

இதேபோல் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் நடைபெற்ற கைப்பந்து போட்டியில்
பொதுமக்கள் அணி வெற்றி பெற்று அசத்தியது. ஒட்டுமொத்தமாக அதிக அளவில் 112 புள்ளிகளைப் பெற்று கண்ணகி நகர் காவல் மன்றம் அசத்தியுள்ளது.

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் வெற்றி பெற்ற அணிகளுக்கு
கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி வெகுவாக பாராட்டி வாழ்த்துக் கூறினார்.

இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட 14 சிறார் காவல் சிறார் மற்றும்
சிறுமியர் மன்றத்திற்கும் அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் தாம்பரம் மாநகர
காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார்.

——-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.