பிரீத் அனலைசர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு அக்கருவியை தயாரித்த நிறுவனத்திடம், விளக்கம் கேட்டுள்ளதாக,சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 27 ஆம் தேதி இரவு சட்டம்-ஒழுங்கு போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயம் , சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், எல்டாம்ஸ் சாலை வழியாக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தீபக்கின் காரை மடக்கிய போலீசார் அவர் மது அருந்தியுள்ளாரா? என பிரீத் அனலைசர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது தீபக்கின் உடலில் 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக ரீடிங் காட்டியதால், அவர் அதிர்ச்சியடைந்தார். போலீசார் அபராதம் செலுத்த வேண்டி தீபக்கிற்கு ரசீது வழங்கிய நிலையில், குடிப்பழக்கம் இல்லாத எனக்கு எப்படி தான் குடித்திருப்பதாக கருவி ரீடிங் காண்பிக்கும் என போலீசாரிடம் கடும் வாக்குவாதம் மேற்கொண்டார்.
இதையடுத்து வாக்குவாதம் முற்றியதால், வேறு ஒரு பிரீத் அனலைசர் கருவி மூலம், தீபக்கிற்கு மீண்டும் போலீசார் பரிசோதனை செய்தபோது அவர் குடிக்கவில்லை என்று கூறியது உண்மைதான் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் அனுப்பி வைத்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த தீபக், தன் கண் முன்னே ஆடி ((Audi)) காரில் சென்றவர்களை தடுத்து போலீசார் பரிசோதனை செய்யவில்லை, ஆனால் சிறிய கார், பைக் மற்றும் சைக்கிளில் சென்ற நபர்களை கூட விட்டு வைக்காமல் பரிசோதனை செய்ததாக தெரிவித்தார். காவல்துறை பாரபட்சம் பார்ப்பது ஏன் என தெரியவில்லை என்ற அவர், இதுபோன்ற தவறுகள் நடக்கும் போது பாதிக்கப்படும் பொதுமக்கள் குடிக்கவில்லை என்றால், போலீசாரை எதிர்த்து கேள்வி கேட்க தயங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தீபக்கிற்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், பிரீத் அனலைசர் கருவியால் இளைஞருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து உரிய விசாரணை நடந்து வருவதாகவும், இதுபோன்ற பிரச்னைகள் இதற்குமுன் வந்ததில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அந்த பிரீத் அனலைசர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு அக்கருவியை தயாரித்த நிறுவனத்திடம், விளக்கம் கேட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









