கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பொதிகை படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கின.  கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில்…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் பொதிகை படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கின. 

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர
திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இந் நிலையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்ததையொட்டி 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை
கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக் கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதிகை படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த
படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்தபிறகு பொதிகை படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.