அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்ததையடுத்து ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சிறையில் இருந்து வெளியேறினார். அதன்பின் பெங்களூருவில் இருந்து கடந்த மாதம் 8ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று சசிகலா திடீரென அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரின் ஆதரவாளர்கள் சிலர் சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். சசிகலாவின் திடீர் முடிவு வேதனையளிப்பதாகவும், அவர் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது







