கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் மாநகர காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
கோவையில் நடைபெற்ற கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை மாநகர காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் தொடர்ச்சியாகச் சென்னை ஓட்டேரி எஸ் எஸ் புரம் பத்தாவது தெருவில் அமைந்துள்ள சாகுல் அமீது என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனையானது தற்போது நிறைவடைந்து இருக்கிறது. மேலும், சோதனை செய்யப்பட்ட சாகுல் அமீது வீட்டிலிருந்து செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையாளர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சோதனையில் உதவி ஆணையாளர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான ஆறு காவல் ஆய்வாளர்கள் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் 2 செல்போன்கள், வங்கி ஆவண புத்தகம் ஆகியவற்றைக் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் நிச்சயமாக ஆஜராக வேண்டும் என்ற உத்தரவோடு சோதனையானது நிறைவு பெற்றதாகத் தெரிகிறது. மேலும், சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சென்னை மாநகர காவல் துறை தேசிய புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி வந்தனர்.
அந்த வகையில் இப்போது சென்னை ஓட்டேரி எஸ் எஸ் புரம் பத்தாவது தெருவில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டிலும் அதேபோன்று ஏழ்கிணறு பகுதியில் உள்ள இரண்டு இடங்களிலும் வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்.எம் புகாரி என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அதேபோன்று சென்னையின் பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வுத் துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் மூலம் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணையானது தீவிர படுத்தப்படும் எனவும் தெரிகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட தற்போது கோவை சிறையில் உள்ள அந்த ஐந்துபேரும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கப்படலாம் என தெரிகிறது. மீண்டும் சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் இந்த சோதனையானது தற்போது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







