I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தின் போது 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் (இன்று செப் 13) நடைபெற்றது. இதனைத்தொடர்நது காஙகிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
“இன்றைய கூட்டத்தில் 12 பேர் கலந்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். ஊழல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொளவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என வேணுகோபால் தெரிவித்தார்.







