மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன.
இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி, கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







