ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு வாரங்களாக அவை அமளியால் முடங்கியது. இதைத்தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3-வது நாளாக நேற்றும் விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி நேற்று பதிலளித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குறுக்கிட்டு எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம் என தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசினார். மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு தொடர்ந்து இடையூறு செய்ததாகவும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றம்சாட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை, மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே எழுப்பினார். அப்போது சவுத்ரி நீரவ் மோடி பற்றி தான் பேசினார். ஒரு சாதாரண காரணம் மட்டும்தான். நீரவ் என்றால் அமைதி என்று பொருள். அதற்காக எல்லாம் சஸ்பெண்ட் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பொதுக் கணக்குக் குழு, வணிக ஆலோசனைக் குழு, சிபிசி தேர்வு உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் சவுத்ரி பதவி வகித்து வருகிறார் என்பதை எடுத்துக்காட்டிய கார்கே, அவரை இடைநீக்கம் செய்வது தீங்கு விளைவிக்கும்.. மேலும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர் பங்குகொள்ள முடியாத சூழல் ஏற்படும். அவர் பெரிதாக தவறை இழைத்து விட்டதாக எண்ணி இடைநீக்கம் செய்திருப்பது தவறு என்று நினைக்கிறேன். அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரை கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர், இந்த பிரச்சினை மற்ற அவையில் நடந்தது. எனவே நடவடிக்கை எடுக்க முடியாது கூறினார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அமைச்சர்கள் பேசும் போதோ அல்லது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதோ சபையை இடைவிடாமல் சீர்குலைப்பதாக நடந்துகொள்வது தவறு என்பதாலையே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்துக்கு காரணம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா











