எதற்கு கோபப்பட வேண்டும் என ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை -மகளிர் ஆணையத் தலைவர் விமர்சனம்!

கோபப்படவேண்டிய விஷயங்களுக்கு உரிய முன்னுரிமையளிக்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

கோபப்படவேண்டிய விஷயங்களுக்கு உரிய முன்னுரிமையளிக்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, அவையில் இருந்து வெளியேறும் போது பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியிருந்தார்.
இது போன்ற அநாகரிகமான செயல் இதுவரை நடந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ‘மணிப்பூரில் பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தின் மீதும், பில்கிஸ் பானு மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யப்பட்டது குறித்தும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோபப்படாதது ஆச்சரியமளிக்கிறது’ என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஸ்மிருதி இரானி மக்களவையில் புதன்கிழமை மிகவும் கோபத்துடன் பேசினார். ஆனால், மக்களவையில் தனக்கு பின்வரிசையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் அமர்ந்திருந்த நிலையில், அந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானியின் கோபம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, மணிப்பூரில் இரு பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் போதும் ஸ்மிருதி இரானி கோபப்படவில்லை.

குஜராத்தில் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொலை செய்த 11 குற்றவாளிகள் சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யப்பட்டபோதும் அவர் கோபப்படவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவருவதும் அவரைக் கோபப்படுத்தவில்லை.

ஒருவேளை, கோபப்படவேண்டிய விஷயங்களுக்கு உரிய முன்னுரிமையளிக்க ஸ்மிருதி இரானிக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.