பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 33 தொகுதிகளில் இம்ரான் கானே போட்டியிட உள்ளதாக பிடிஐ கட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே அந்நாட்டின் நிதிநிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சிகள் பிரிந்து, எதிர்கட்சியுடன் இணைந்ததால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனிடையே ஆட்சி கவிழும் முன்பே தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் 33 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 12 தொகுதிகளுக்கும் கைபர் பக்துன்க்காவில் 8 தொகுதிகளுக்கும் இஸ்லாமாபாத்தில் 3 தொகுதிகளுக்கும் சிந்து மாகாணத்தில் 9 தொகுதிகளுக்கும் பலுசிஸ்தானில் 1 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் பிடிஐ கட்சி சார்பில் 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத்தலைவர் குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ எங்கள் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கானே 33 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறார்” என்று தெரிவித்தார்.







