தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, லாகூரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாகச் சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பேரணி நேற்றிரவு வஸிராபாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இம்ரான்கானை கொல்லும் நோக்கத்தில் மர்மநபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இம்ரான்கானின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீதே இம்ரான்கான் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர்களான ஆசாத் உமர், இக்பால் ஆகியோர், இந்த துப்பாக்கி சூட்டின் பின்னணியில் உள்ளவர்களாக மூன்று பேர் மீது இம்ரான்கான் சந்தேகம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ஐஎஸ்ஐ தலைமை இயக்குனர் பைசல் நசீர் ஆகியோர் மீது இம்ரான்கான் சந்தேகம் அடைந்துள்ளார் என பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர்.