சுங்குவார்சத்திரம் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கடந்த 18-ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
அப்போது, தங்கும் விடுதியில் உணவு தரமற்று இருப்பதாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித் தர வேண்டும் என என பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும், தேவையான குளியல் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்து, தரமான உணவுகளை சமைத்து உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்கள் அவசர காரணங்களுக்காக விடுப்பு கேட்கும் போது, விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் – வடகாலில், ஊழியர்கள் தங்குவதற்காக 570 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்டப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில், 8 தொகுதிகளாக, 11 மாடிகள் கொண்டதாக தங்கும் விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 18 ஆயிரத்து 750 பேர் தங்கும் வகையிலும் கட்டப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.








