புதிய வேளாண் சட்டங்கள் சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 2020 ஜுன் மாதம் புதிய மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. அமல்படுத்திய நாளிலிருந்து தொடர் சிக்கல்களை இச்சட்டம் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார். பல மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து கடந்த நவ.19ம் தேதி இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்புக்கு 5 மாநில தேர்தல்கள்தான் காரணம் என பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் விழா ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கலாம் ஆனால் நிச்சயம் மீண்டும் முன்னேறுவோம்.” என்று கூறியுள்ளார். மேலும், “நாங்கள் வேளாண் மசோதாக்களை கொண்டுவந்தோம். சுதந்திரமடைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்க பின்னர் வேளாண் துறையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மிகப்பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை.” என்று கூறினார்.

இதன் காரணமாக வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்கிற ஐயம் பல்வேறு தரப்பிலிருந்து மேலெழுந்துள்ளது. இச்சட்டங்களுக்கு எதிரான கடந்த ஓராண்டு கால போராட்டத்தில் ஏறத்தாழ 700க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்போராட்டத்தில் உயிரிழந்த தங்கள் மாநில விவசாயிகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. மட்டுமல்லாது, உயிரிழந்த அனைவருக்கும் மத்திய அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.