மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள், சட்டங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களையும், சட்டங்களும். அண்ணா மறைவுக்கு பிறகு, 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம்…

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களையும், சட்டங்களும்.

அண்ணா மறைவுக்கு பிறகு, 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, 1970ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கு மே தினத்தை கட்டாய விடுமுறையாக்குவதற்கான சட்டத்தை கொண்டு வந்தார்.

1974ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, இந்து மதத்தின் அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே, மாநில சுயாட்சி குறித்த மாநில அரசின் கருத்துக்களையும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் விவாதத்திற்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் ஒன்றையும் கருணாநிதி கொண்டு வந்தார். 1989ஆம் ஆண்டு பெண்களுக்கு சமத்துவம் அளிக்கும் வகையில் இந்து குடும்பத்தில் பிறந்த மகளிருக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வழிவகை செய்யும் இந்து வாரிசு உரிமை சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அதே ஆண்டில், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளில் 30 சதவிகிதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்ததை கருணாநிதி கொண்டு வந்தார்.

1996ம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் மேலவையை தோற்றுவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1997ஆம் ஆண்டில் உயர்கல்வி நிலையங்களில் புதியதாய் சேரும் மாணவர்களை ஏற்கனவே உள்ள மாணவர்கள் கேலிவதை என்ற பெயரால் துன்புறுத்துவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.

அதே ஆண்டின், ஏப்ரல் மாதத்தில் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக அமையும் வகையில் பொதுமக்கள் தகவல்களை கேட்டு பெற “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” கொண்டு வரப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மு.கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார்.

2006 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வழிவகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் மாநில ஆட்சி மொழியான தமிழை அறிமுகப்படுத்த குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு தைத் மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் வகையில் சட்டம் இயற்றினார் கலைஞர் கருணாநிதி. மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நான்கு வகையான பள்ளிக்கல்வி முறைகள் இருந்தவந்த நிலையில் அதில் உள்ள வேறுபாடுகளை களைய தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்விமுறைச் சட்டத்தை கொண்டு வந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.