தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் மதுபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதை சுட்டிக் காட்டியுள்ளார்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை என்பதோடு, இது முதலும் இல்லை கடைசியும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவதோடு இளம்பெண்கள் கைம்பெண்கள் ஆவதாகவும் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுவதாகவும் கூறியுள்ளார்.மேலும், இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது.
எனவே தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.








