உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் ஐந்து ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கும் பொருட்டு மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டதாகவும் இன்று காலை 10 மணி வரை 916 மாணவர்களும் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்களும் புலம்பெயர்ந்தோரும் நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என கூறியுள்ள முதல்வர், மாநிலத் தொடர்பு அலுவலர் ஜெசிந்தா லாசரஸையும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தையும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
https://twitter.com/DMKNRIWing/status/1496853090758107136
மேலும், உக்ரைனில் சிக்கித் தவிப்போர், மாநில அவசர கட்டுப்பாட்டு எண் மூலமாகவும் அரசு அறிவித்துள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதோடு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கும் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் வாயிலாக தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







