திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்தனர். இந்த விவகாரத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக பல்வேறு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இம்பீச்மென்ட் நோட்டீஸில் கையெழுத்திட்ட அனைத்து எம்.பி.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.







