வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால். இவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் ரவுடி ஜமால், மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான வணிகர்கள், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஜமால் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜமாலை சரணடையக் கூறிய நிலையில், இன்று ரவுடி ஜமால் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காவல்நிலையத்தில் சரணடைவதற்கு முன்னதாக, தான் பிரபலமடைய வேண்டும் என்பதால், தனது ஆதரவாளர் ஒருவரின் உதவியுடன், சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிடக் கூறியுள்ளார். அதன்படி ஜமால் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் அவரது ஆதரவாளரும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : குரூப் 2 தேர்வு குளறுபடி ; மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்
நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி ஒன்றில், நான் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடி தான் என்று கூறியிருப்பார். அதே பாணியில், ரவுடி ஜமாலும் தான் காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்ய கூறியிருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.