இளையராஜாவின் காப்புரிமை வழக்கு மனு தள்ளுபடி; உச்சநீதிமன்றம் உத்தரவு!

சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக் இந்த வழக்கை தாக்கல் செய்தது.

 

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இளையராஜாவின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இளையராஜாவின் இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (IMMP) நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஒலிப்பதிவுகளில் சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை IMMP மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, டிசம்பர் 2021 அன்று, சோனி நிறுவனம் ஒரு முக்கிய அம்சத்தைக் கண்டறிந்தது. எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பதிப்புரிமை உரிமையைப் பெற்ற சில பாடல்கள், யூடியூபில் பதிவேற்றப்பட்டு, IMMP நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதை சோனி நிறுவனம் உறுதி செய்தது.

சோனி மியூசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 536 ஆல்பங்களில், 228 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும், இதன் மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

ஆனால், ஒளிபரப்பப்பட்ட படைப்புகளின் உரிமை தங்களுக்குத்தான் இருப்பதாக இளையராஜா மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கான ஒளிபரப்பையும் தொடர்ந்து மேற்கொண்டது.

இதையடுத்து, பதிப்புரிமையை மீறியதற்கான இழப்பீடு கோரி, இளையராஜாவின் IMMP நிறுவனத்திற்கு எதிராக சோனி மியூசிக் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.