Ilaiyaraaja BGM’s | பின்னணி இசை விருந்து – அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் தொடங்கினார் இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசைக்கான யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.…

Ilaiyaraaja BGM's | Background Music Party - Ilayaraja Launches Official YouTube Channel!

இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசைக்கான யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான ஜமா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே, இசைக் கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில், தான் இசையமைத்த திரைப்படங்களில் இடம்பெற்ற பின்னணி இசைகளை பதிவேற்ற அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை துவங்கியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சேனலுக்கு இளையராஜா பிஜிஎம்’எஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில், “பின்னணி இசைக்கான எனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது பாடல்கள் உங்களை ஆட்கொண்டதை போல, இந்த பின்னணி இசையும் உங்களின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஒரு கதையை சொல்லும் இந்த இசைப் பயணத்தை ஒன்றாக தொடங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை பாகம் 1’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பும் துவங்கவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.