பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, 2020ம் ஆண்டில்…

கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார்.
பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும்.

ஏற்கனவே, 2020ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக திகழும் இகா ஸ்வியாடெக், நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் 18 வயது அமெரிக்க வீராங்கனையான கோகோ கெளஃபை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார் இகா. எனினும், இரண்டாவது செட் ஆட்டத்தில் கோகோ கடும் சவால் அளித்தார். எனினும், தனது தனித்துவமான ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் தன் வசமாக்கி வெற்றி வாகை சூடினார் இகா ஸ்வியாடெக். இதையடுத்து, கோப்பையை அவர் முத்தமிட்டார்.

வெற்றிக்கு பிறகு அவர் பேசுகையில், “எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. நானும் கடுமையாக உழைத்தேன். மீண்டும் அடுத்த ஆண்டு சந்திக்கலாம். இந்த கடினமான காலகட்டத்தில் உக்ரைன் வலிமையாக இருக்க வேண்டும்” என்றார்.
அமெரிக்க முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸின் 21ம் நூற்றாண்டின் சாதனையை தொடர்ச்சியாக 35 வெற்றிகளை பெற்றதன் மூலம் இகா சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில், நார்வே வீரர் கேஸ்பர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றனர். 14வது முறையாக நடால் சாம்பியன் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.