தக்காளி விலை ஏற்ற விவகாரம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுத்துப்பூவமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தக்காளி விலை ஏற்றத்திற்கு அதீத மழையே காரணம் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தக்காளி விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை முன்வைத்திருந்த நிலையில், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
தக்காளி விலை உயர்வு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விகள்:
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு ரூ.110 முதல் 150 வரை அதிர்ச்சியூட்டும் அளவை எட்டியுள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியானால், தக்காளியின் இருப்பு மற்றும் தக்காளி விலையை ஒழுங்குபடுத்தும் போது அதன் தரத்தை உறுதி செய்வதற்கான கொள்கைகள் என்ன?
- தக்காளி, வெங்காயம், வெள்ளரி போன்ற அத்தியாவசியப் பயிர்களின் விலையைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
- நாடு முழுவதிலும் பொருட்களின் தேவை மற்றும் அவற்றின் விநியோகத்தை நிலைப்படுத்த, மேலும் தக்காளியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
- மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?
இதற்கு மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள பதில் வருமாறு:
நாடு முழுவதும் உள்ள 536 மையங்கள் மூலம் தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நுகர்வோர் விவகாரத் துறை கண்காணிக்கிறது. தக்காளியின் தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில், விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் கீழ் தக்காளி கொள்முதலை அரசு தொடங்கியுள்ளது.
தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மண்டிகளில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதி, பீகார், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய நுகர்வு மையங்களில் மலிவு விலையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தக்காளி முதலில் கிலோ ரூ.90 சில்லறை விலையில் விற்கப்பட்ட நிலையில், ஜூலை 16-ஆம் தேதி (16.07.2023) அன்று ரூ.80 – க்கு விற்கப்பட்டது. இது ஜூலை 20-ஆம் தேதி (20.07.2023) ஒரு கிலோ தக்காளி ரூ.70 என்ற அளவுக்கு விலை குறைந்து விற்கப்பட்டது.
வெங்காயத்தைப் பொறுத்தமட்டில், விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை சரி செய்யவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்யவும் விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்காளியை பொறுத்தவரை பயன்பாட்டு தேவை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு 2020-21ல் 1 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி அளவை, 2022-23ல் 2.50 மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல 2023-24 ஆம் ஆண்டிற்கான வெங்காய உற்பத்தி இலக்கு 3 மெட்ரிக் டன்னாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலையைக் குறைப்பதற்காக, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான வரத்து குறைவான நேரங்களில் முக்கிய நுகர்வு மையங்கள் மூலம் வெங்காயம் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் தக்காளி வரத்து குறைந்து விலை உயரும். அதோடு தக்காளி எளிதில் அழுகக்கூடியதால் சேமித்து வைக்க முடியாது. இந்நிலையில், அதிக பருவ மழை மற்றும் விநியோக நடைமுறை சிக்கல்கள் தக்காளி விலை ஏற்றத்திற்கு வழி வகுவித்துள்ளது.
நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன், வெங்காயத்தை மதிப்புக்கூட்டி, சேமித்து வைத்து வரத்து குறைவான நேரங்களில் விநியோகித்து விலையேற்றத்தை தடுக்க நுகர்வோர் விவகாரத் துறை 2022 முதல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
மேலும் தக்காளி மற்றும் வெங்காயம் விலையேற்றத்தை குறைக்க 606 நிபுணர்களிடம் யோசனைகள் பெறப்பட்டு அதில் 11 யோசனைகளை பரிட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை ஜூன் 30-ஆம் தேதியிலிருந்து கடுமையாக உயர தொடங்கியது. அப்போதிலிருந்தே, விலையேற்றத்தை குறைக்க விவசாயிகளுடன் ஆலோசித்து பாதுகாப்பாக சந்தைப்படுத்துதல், பிற பகுதிகளுக்கு விரைவாக தக்காளியை அனுப்புவதில் உள்ள சிக்கல்களை களைவது தொடர்பாக விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு, தக்காளியை அதிகமாக விளைவித்து, பாதுகாப்பாக விநியோகம் செய்வது குறித்து ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளது.
தக்காளியை இறக்குமதி செய்வதற்கான எந்த முன்மொழிவும் இல்லை. ஏனெனில் பயிர் பருவகாலம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை போன்ற வானிலை காரணிகளே தற்போதைய விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







