ராமரை போல உறுதியாக இருந்தால், புதிய உச்சங்களை அடையலாம் என பிரதமர் மோடி அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாடத்தில் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். நேற்று அயோத்தி சென்ற பிரதமர் ராமர் கோயிலுக்கு சென்று பால ராமருக்கு பூஜை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்து, கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். சரயு நதிக்கரையில் வனவாசம் முடிந்து வந்த ராம பிரானை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபட்டார். தொடர்ந்து பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராமரின் சொற்கள், எண்ணங்கள், ஆட்சி என அனைத்தும் ‘அனைவரையும் இணைத்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற கொள்கையை ஊக்குவிக்கிறது. தற்போதையை அரசின் கொள்கைகளுக்கு அடிப்படையாக ராமரின் எண்ணங்களே உள்ளன. இந்த பிரமாண்ட தீபஒளி விழாவை ஒட்டு மொத்த உலகமும் கண்டு வருகிறது.
ராமரை போல உறுதியாக இருந்தால், நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடைய செய்வதற்கான இலக்கை அடைய நினைக்கும் மக்களுக்கு ராமரின் கொள்கைகள் கலங்கரை விளக்கமாக உள்ளன.
நாட்டின் கடினமான இலக்குகளை அடைவதற்கான தையரியத்தையும் ராமரின் கொள்கைகள் வழங்குகின்றன. கடவுள் ராமர், சகோதரர் லக்ஷமண், சீதை ஆகியோரின் படங்கள் அரசமைப்பு சட்டத்தின் முதல் பிரதியில் வரையப்பட்டிருந்தன. இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது. ராமரிடம் இருந்து பல விஷயங்களை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.







