ஒளி மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் இரவு நேர வானத்தில் பிரபஞ்சத்தை பார்க்கும் மனிதனின் திறன் குறைந்து நட்சத்திரங்களையே பார்க்க முடியாத சூழ்நிலை வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக மனிதர்கள் இரவு நேரங்களில் நட்சத்திரங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக, இவ்வுலகில் மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறார்கள். தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா புத்தகம் சொல்லுகிறபடி, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே விவசாயிகள் எப்போது பயிர் செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ள நட்சத்திரங்களைப் பார்த்தார்கள். அதேபோல் பயணிகள் திசைகளைச்
சொல்ல நட்சத்திரங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்கள்.
ஏன் இன்றும்கூட விண்வெளிப் பயணத்தில், நட்சத்திரங்கள் இன்னும் வழிநடத்திகளாக பயன்படுத்தி வருகின்றார்கள்.இது தவிர உலகளவில் பல நாட்காட்டிகளும் நட்சத்திரங்களை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, நமது கலாச்சாரத்திலும் ஒவ்வொரு மனிதனின் ராசியும், நட்சத்திரமும் இதனை அடிப்படியாகக் கொண்டே இயங்கி வருகிறது. இப்படி நம் வாழ்வுடன் கலந்த நட்சத்திரங்களை அடுத்த 20 ஆண்டுகளில் நமது வெறும் கண்களால் இரவு நேரத்தில் காண முடியாது என்று சொன்னால் எப்படி இருக்கும் ? இந்த பேரதிர்ச்சியான நிகழ்வு மிக விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காரணம், கடந்த சில ஆண்டுகளில், ஒளி மாசுபாடு பிரச்சினை வேகமாக மோசமடைந்து வருவதால் தான். இந்த ஒளி மாசுபாடு என்பது மனிதர்களான நம்மிடம் உள்ள செயற்கை ஒளியின் மூலங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒளியானது, இயற்கை ஒளியின் அளவை
மாற்றக்கூடிய நிகழ்வு தான். அதாவது, நகரங்களில் இரவில் வாழ மனிதர்கள் செயற்கை விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த நூற்றாண்டில் நாம் அனுபவித்த நகரமயமாக்கலின் அதிகப்படியான செயற்கை விளக்குகள் அதிகப்படியான உயிரினங்களையும் நிலப்பரப்பையும் பாதித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஒளி மாசுபாட்டால் இரவு நேர வானத்தில் பிரபஞ்சத்தை பார்க்கும் மனிதனின் திறன் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, அதிகரித்து வரும் ஒளி மாசுபாடு இப்போது ஆண்டுக்கு 10
சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்ந்தால் தற்போது இரவு வானில் 250 நட்சத்திரங்கள் தெரியும் இடத்தில் பிறந்த குழந்தை 18 வயதை அடையும் போது (கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு )100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்று ஜெர்மன் புவி அறிவியல் மையத்தின் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கைபா தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், நாம் பயன்படுத்தும் விளக்குகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவது கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள அவர், அதன்படி வெளிப்புற விளக்குகளை கவசமாக்குதல் மற்றும் அவற்றை கீழ்நோக்கி ஏறிய விடுதல், விளக்குகளின் பிரகாசத்தை குறைத்தல் மற்றும் அவை நீல-வெள்ளை நிறத்தில் இல்லாமல் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கூறுகளைக் கொண்டவையாக இருத்தல் என, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த விஷயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) இல் உள்ள கண் மருத்துவக் கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஃபோஸ்பரி பேசுகையில், தற்போது நாம் பயன்படுத்தும் LED களில் நீல நிற உமிழ்வுகள் மட்டுமே இருப்பதாகவும், சிவப்பு அல்லது ஆரஞ்சு ஒளியைக் அது கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சிவப்பு நிற ஒளி நம் உடலில் பிரகாசிக்கும்போது அது இரத்தத்தில் உள்ள அதிக படியான சர்க்கரையை உடைப்பதோடு, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான வழிமுறைகளைத்
தூண்டுகிறதாம்.
ஃப்ளோரசன்ட் லைட்டிங் மற்றும் எல்.ஈ.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஸ்பெக்ட்ரமின் அந்த பகுதி செயற்கை ஒளியில் இருந்து அகற்றப்பட்டு, இன்று நாம் காணும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் அதிகப்படியான எழுச்சிக்கு இதுவும் ஒரு பங்கை
வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்என ஃபோஸ்பரி கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா











