தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளட்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கில் தான் 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று. அப்படியென்றால் மீதமுள்ள தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி செல்லாக் காசு ஆகிவிட்டாரா?.
ஏன் சொந்த மாவட்டம் சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை. வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?.
தென் மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவரில் உள்ள 37 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் மொத்தமாக துடைத்து எறியப்பட்டுள்ளது, அப்பொழுது தூல்விக்கு யார் காரணம். வட மாவட்டத்தில் பாமக கூட்டணியால் 34 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.
காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தா.. ஆனால் நாங்கள் உங்களை ராஜினாமா செய்ய கூறினோமா?. இபிஎஸ்தான் பொதுச்செயலாளர் என்று இன்றும் சொல்கிறோம்; தோல்விக்கான காரணங்களை ஆராயுங்கள், தோல்வியில் இருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும், உண்மை நிலவரம் குறித்து கலந்து பேசுங்கள் என்றுதான் சொன்னோம்; அதற்காக எங்கள்மீது பழி போடுகிறார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.




