ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தால் அதை எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு மேல் முறையீட்டு தீர்ப்புக்குப் பிறகு, சென்னை பசுமை வழிச்
சாலையில் உள்ள எடப்பாட்டி பழனிசாமி இல்லம் முன்பு செய்தியாளர்களை முன்னாள்
அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி வேலுமணி கூட்டாக செய்தியார்களை
சந்தித்தனர்.
அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், “ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது மிகச் சிறப்பான தீர்ப்பு. இந்த வெற்றி தொடரும், விரைவில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமையும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தால் அதையும் எதிர்கொள்வோம் வெற்றி பெறுவோம்” என்றார்.
அதை தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி கூறுகையில், “இன்று நீதி வென்றுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். நான்கு ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி அற்புதமான ஆட்சியை தந்தார். ஏராளமான திட்டங்களை வழங்கினார். ஆனால், அந்த திட்டங்கள் இன்று முடக்கி விடப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல. பொதுமக்களும் இந்தத் தீர்ப்பைப் பார்த்து,
மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என கூறும் வகையில்
தீர்ப்பு அமைந்துள்ளது” என்றார்.
ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தால் என்ன செய்வீர்கள் என செய்தியாளர்கள்
கேட்ட கேள்விக்கு, “அவர்கள் என்ன மேல் முறையீடு செய்தாலும், மக்களும் தொண்டர்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பதால் நீதி வெல்லும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்” என்றார்.








