தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டார். அப்போது அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், “என்னை திமுகவில் இணைத்துக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
அரசியலில் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியல் பண்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து பெருமகிழ்ச்சியுடன் திமுகவில் என்னை இணைத்திருக்கிறேன். சர்வாதிகார ஆணவப்போக்குடன் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, என்றைக்கும் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கத்தை நட்போடு அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின். கடந்த 5 ஆண்டு காலம் முதல்வராக அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
சர்வாதிகாரத்தனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதில் அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டத்தில் இருந்து எந்த தலைவரும் வரக்கூடாது என்பதில் இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார். எனவே, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த இயக்கமாக திமுக உள்ளதால் அதில் என்னை இணைத்திருக்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்கிற போக்கு அதிமுகவில் இப்போது இல்லை. வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திமுகவை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.







