பிரதமர் மோடி தலைமையில் நேற்று(மே.1) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன, இருப்பினும் அதற்கான கால வரையறை குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியதற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தனது வரவேற்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டு அரசியலைமைப்பு மாற்றப்பட்டிருக்கும். எதிர்கட்சிகளால் அது முடியாமல் போனது.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையின் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தவர் ராகுல் காந்தி தான். அதின் நாங்கள் முன்னோடியாக இருந்து 15 மாதங்களுக்குள் வாக்குறுதியை நிறைவேற்றி, தேசிய அளவில் முடிவெடுக்க வழி வகுத்தோம்.
அரசியல் தலையீடு இல்லாமல் இதை திறமையாக செய்ய முடியும். எங்கள் அனுபவத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான சமூக அமைப்பை ஆய்வு செய்து, அதற்கேற்ப ஒருமித்த கருத்தை உருவாக்க ஒரு நிபுணர் குழுவுடன் மத்திய அமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் இதை அரசியலாக்கவில்லை. எங்கள் ஒரே நோக்கம் சமூக நீதி”
இவ்வாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.









