ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிராபகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி்மு.க வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள இந்த சூழலில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓபிஎஸ் ஆதாரவாளரான ஜேசிடி பிராபகர் கூறுகையில், வரும் 31-ம் தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை அறிவிப்பார். பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை உறுதியாக அறிவிப்பார் என்று கூறினார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் கூறுகையில், “இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்தான். இரட்டை இலைக்கு கையெழுத்திடும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வதுக்கு மட்டுமே உண்டு. எடப்பாடி பழனிசாமி என்றைக்கோ வெளியேறிவிட்டார்” என்று கூறினார்.
தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலுக்காக 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.







