அனைவருக்கும் அடையாள அட்டை ; ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 23ஆம் தேதி நடைபெறும்  கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ள கூச்சல், குழப்பத்தை முறியடிக்க…

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 23ஆம் தேதி நடைபெறும்  கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ள கூச்சல், குழப்பத்தை முறியடிக்க முடியும் என ஓபிஎஸ்-இபிஸ் கருதுவதாக தெரிகிறது.

அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ள செயற்குழு – பொதுக்குழுவில் பங்கேற்கும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக எதிர்க்கட்சியான பிறகு நடைபெறும் முதல் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், உட்கட்சி பூசல், ஒற்றைத் தலைமையை எதிர்நோக்கிய குரல், சசிகலாவின் சுற்றுப்பயணம், டிடிவி தினகரனின் வருகை, ஜாதிக் கட்சி என்ற மாயை, பாஜகவின் வளர்ச்சி என பலமுனைப் பிரச்னைகள் அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.

அதிமுகவில் நிகழும் உட்கட்சி பிரச்னைகள், வார்த்தை போர்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாலும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழலே நிலவுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள், கட்சியில் நிகழும் அனைத்து பிரச்னைகளுக்கும்  இந்த பொதுக்குழு முற்றுப்புள்ளி வைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கின்றனர் .

வி.கே.சசிகலாவின் திட்டம் ?

அதிமுகவில் இருந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் 90 % பேர் களையெடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள சிலர் தன்னை சசிகலா ஆதரவாளராக காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் பொதுக்குழு நடைபெறும் போது தனக்கு ஆதரவாக குரல் எழுப்ப அதிமுகவினர் சிலரை சசிகலா தயார் செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதும், விரைவில் அதிமுக தம் தலைமையில் செயல்படும் என பேசி வரும் வி.கே.சசிகலா பொதுக்குழுவில் தமக்கு ஆதரவாக குரல் எழுப்ப சிலரை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது

சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் பங்கேற்பதை தடுக்கவும், பொதுக்குழு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்

செயற்குழு – பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக செயல்பட்டு உடனடியாக அதற்கான பணியை தொடங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழுவில் வேற்று ஆட்கள் யாரும் நுழைய முடியாதபடி முன்னேற்பாடுகளை செய்யவும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவும்

பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி ஒற்றைத்தலைமை எனும் குரலும் பொதுக்குழுவில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டம் தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

விக்னேஷ்வரன். இரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.