ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீடு; சுவாரஸ்ய தகவல்கள்!

ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீடு; தாமதத்திற்கு காரணமான பாகிஸ்தான் அணியின் கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்தது ஏன்? 10 ஆண்டுகள் ஐசிசி கோப்பைக்கான தேடல் இந்தியாவுக்கு நிறைவேறுமா? விண்வெளியில் இருந்து தொடங்கப்பட்ட உலகக்…

ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீடு; தாமதத்திற்கு காரணமான பாகிஸ்தான் அணியின் கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்தது ஏன்? 10 ஆண்டுகள் ஐசிசி கோப்பைக்கான தேடல் இந்தியாவுக்கு நிறைவேறுமா? விண்வெளியில் இருந்து தொடங்கப்பட்ட உலகக் கோப்பை சுற்றுப்பயணம் உள்ளிட்ட சுவாரஸ்ய விவரங்கள் அடங்கிய உலகக் கோப்பை 2023 தொடர் சம்பந்தமான சிறப்புத் தொகுப்பு.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், உலக கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகின்ற ஒரு நிகழ்வு. சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பினுடைய (ஐசிசி) அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தகுதி பெற்ற 10 அணிகள் நடப்பாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. பொதுவாகவே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணைகள், போட்டிகளுக்கான நீண்ட இடைவெளி இருக்கும் போதே வெளியிடப்படும். ஆனால் ஐசிசி தரப்பிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் வைத்திருந்த கோரிக்கையால் இந்த முறை, சரியாக 100 நாட்கள் இருக்கும் நிலையில் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

 உலகக் கோப்பை 2023 ஐம்பது ஓவர் கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 48 போட்டிகளை, 46 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி வரும் நவம்பர் 19 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே போல இறுதிப் போட்டி மற்றும் நிறைவு விழாவும் இதே நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தான்:

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் என்றாலே, 1978 முதல் இந்த நொடி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் வரலாற்று பிரச்னைகளை மையப்படுத்துவதை தவிர்த்து, விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் போது, குறிப்பிட்ட சில போட்டிகளில் இருந்தே தொடங்கிய விருவிருப்பானது இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்திய அணியும், பாகிஸ்தானும் களம் காணும் போட்டிகள் பொதுவாகவே ஒவ்வொரு மைதானங்களிலும் ஹவுஸ் புல் ஷோ தான். அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்த தொடருக்காக இந்தியா அங்கு சென்று விளையாடியதே கடைசி. அதன் பிறகாக கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சென்று விளையாடுவதை இந்திய அணி மறுத்து வருவதை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியா வருவதை மறுத்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியிலும், 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்காகவும் பாகிஸ்தான் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் பிறகாக இந்திய மண்ணில் எந்த ஒரு ஐசிசி கோப்பை தொடர்கள் நடைபெறாத நிலையில் விளையாடவில்லை. எனவே இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வருகை புரியும் பாகிஸ்தான் அணி 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணை முத்தமிடுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீட்டில் தாமதம் ஏன்?

நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணியே நடத்துகிறது. இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம், நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வர மறுத்தது. ஆனாலும், தனது முடிவில் இருந்து மாறாத, பிசிசிஐ ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டும் எனில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை வேறு நாட்டில் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில் ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பிடம் முறையிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம், வேறு வழியின்றி இந்தியாவினுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடும் படி மாற்றியமைத்து போட்டி அட்டவணையை வெளியிட்டது. எனவே இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு வழியாக முடிவு கட்டப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியும் இந்தியா வர சம்மதம் தெரிவித்தது. ஆயினும் பாகிஸ்தான் அணி வைத்த ஒரு நிபந்தனைதான் ஐசிசி உலகக் கோப்பை அட்டவணையை வெளியிட தாமதமானதுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் விதித்த நிபந்தனையை ஐசிசி நிறைவேற்ற வேண்டி இருந்ததால், உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு தாமதமானது.

அந்த நிபந்தனையின் படி, உலகக் கோப்பை மாதிரி அட்டவணையை பாகிஸ்தான் அணியிடம் பகிர்ந்து ஐசிசி ஒப்புதல் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால், போட்டிக்கான இடத்தை மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை சென்னையிலும், ஆப்கானுக்கு எதிரான போட்டியை பெங்களூரிலும் நடத்தும் படி கோரிக்கை வைத்திருந்தது பாகிஸ்தான். ஆனால் இது மிகவும் தாமதமான கோரிக்கையாக இருப்பதனால் மாற்றியமைக்க முடியாது என நிராகரித்தது ஐசிசி. எனவே தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட வேண்டிய அட்டவணை இன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.

இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை:

அக்டோபர் 8
இந்தியா – ஆஸ்திரேலியா – எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை

அக்டோபர் 11
இந்தியா – ஆப்கானிஸ்தான் – அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி

அக்டோபர் 15
இந்தியா – பாகிஸ்தான் – நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்

அக்டோபர் 19
இந்தியா – வங்கதேசம் – மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம், புனே

அக்டோபர் 22
இந்தியா – நியூசிலாந்து – ஹிமாச்சல் கிரிக்கெட் மைதானம், தர்மசாலா

அக்டோபர் 29
இந்தியா – இங்கிலாந்து – பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம், லக்னோ

நவம்பர் 2
இந்தியா – குவாலிபயர் 2 – வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை

நவம்பர் 5
இந்தியா – தென்னாப்ரிக்கா – ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா

நவம்பர் 6
இந்தியா – குவாலிபயர் 1 – எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூர்

மொத்தமாக போட்டிகள் நடத்தப்படும் 10 இடங்களில், 9 இடங்களில் இந்தியா தனது லீக் போட்டிகளில் விளையாடுகிறது. அதே போல நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி 1, நவம்பர் 15 இல் மும்பை வாங்கடே மைதானத்திலும், அரையிறுதி 2 நவம்பர் 16 இல் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி நவம்பர் 19 இல் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் தொடங்கிய உலகக் கோப்பை சுற்றுப்பயணம்:

பொதுவாகவே உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கோப்பையானது பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே போலவே இந்த ஆண்டும் உலகக் கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று முதல் தயாரான ஐசிசி, வித்தியாசமான முறையில் விண் வெளியில் இருந்து தொடங்கியது ஐசிசி. பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பு வரை, பெஸ்போக் பலூன் உதவியுடன் உலகக் கோபையை கொண்டு சென்ற ஐசிசி குழுவினர், அங்கிருந்து நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு கோப்பையை தரையிறக்கியுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாதவாறு இந்த முறை வித்தியாசமான முறையில் இந்த கோப்பையை அறிமுகப்படுத்தி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள ஐசிசி, குவைத், ஓமன், மலேசியா, இத்தாலி உட்பட 18 நாடுகளுக்கு உலகக் கோப்பையை கொண்டு செல்லும் பயணத்தை தொடங்கியது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒட்டுமொத்தமாக 1 மில்லியன் ரசிகர்களுக்கு பல்வேறு நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ள ஐசிசி, அவர்களுக்கு வெள்ளியால் ஆன ஐசிசி உலகக் கோப்பைகளை பரிசாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இன்று தொடங்கிய ஐசிசியின் இந்த சுற்றுப்பயணம், செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் மீண்டும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை வந்தடையும் வகையில் பயணத்திட்டத்தை வடிவமைத்துள்ளது ஐசிசி. உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு சரியாக 100 நாட்கள் உள்ளதை அடுத்து உலகக் கோப்பை திருவிழாவை மும்பையில் இருந்து தொடங்கியுள்ள ஐசிசி, பிசிசிஐ – யுடன் இனைந்து போட்டிகளுக்கான தீவிர ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும், ஐசிசி கோப்பைகளும்:

நடப்பாண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கும் இந்திய அணி, 10 வருட ஐசிசி கோப்பை கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை இந்தியா வீழ்த்தி 2 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகாக 2013 இல் அதே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. ஆனால் அதற்கு பின்பாக, 2015 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர், 2019 உலகக் கோப்பை தொடர், என இரண்டிலும் கோப்பையை தவர விட்ட இந்தியா, டி20 உலகக் கோப்பைகளையும், சாம்பியன்ஸ் டிராபிகளையும் தவர விட்டுக்கொண்டே வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2021 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்தியா, நியூசி மற்றும் ஆஸி ஆகிய அணிகளிடம் படு தோல்வியடைந்து இந்திய ரசிகர்களிடையே ஏக்கத்தை ஏற்படுத்தியது. எனவே நடப்பாண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று, ஐசிசி கோப்பைக்கான தாகத்தை மொத்தமாக இந்திய அணி தீர்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

– நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.