ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியில் வெளியானது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்கத் தவறிய இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் சரிந்து 13வது இடத்துக்கு சரிந்தார்.
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ ஓரிடம் முன்னேறி 10வது இடத்தைப் பிடித்தார்.
அதேநேரம், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 ஆவது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்தார் கோலி.
அதேநேரம், விக்கெட் கீப்பர் பண்ட், முதல் இன்னிங்ஸில் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்தார். 2வது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார். கடந்த 6 டெஸ்ட் ஆட்டங்களில் பண்ட் 2 சதங்களையும், 3 அரை சதங்களையும் பதிவு செய்தார். இதன்காரணமாக அவர் 5வது இடத்துக்கு முன்னேறினார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்து பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர் அண்மையில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் 2ஆவது இன்னிங்ஸில் 142 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவும் 114 ரன்கள் எடுத்து அந்த இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 9ஆவது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே டாப் 10 பட்டியலில் தற்போது இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








