பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் பத்ரம், கன்மதம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து, சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தேசிய விருது, சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த நடிகைக்கான கேரளா அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர் மஞ்சு வாரியர். அசுரனில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் சிறந்த நடிகைக்கான சைமா விருதும் கிடைத்தது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் சார்பில் நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் அளித்து வருகிறது.
அந்த வகையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டுக்கான வரியை முறையாகக் செலுத்தியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. நேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் என்ற பாரட்டை பெற்றுள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
– தினேஷ் உதய்









