படங்களில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பீர்களா?-நடிகர் அருண் விஜய் அளித்த பதில்

அருண் விஜய், தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருபவர். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான இவர், தமிழ் சினிமா தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார். நடிகர் அஜித் குமாருடன் இணைந்து…

அருண் விஜய், தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருபவர். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான இவர், தமிழ் சினிமா தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார். நடிகர் அஜித் குமாருடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் கிடைத்தது. அந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பிறகு, குற்றம் 23, மாஃபியா, தடம் என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். பார்டர், சினம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா தயாரிப்பில் ஓடிடியில் நேரடியாக வெளியான ஓ மை டாக் படத்தில் தனது மகனுடன் இணைந்து நடித்திருந்தார் அருண் விஜய். அந்தப் படமும் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சாமி, சிங்கம், சேவல், கோவில் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ஹரி உடன் இணைந்துள்ளார் அருண் விஜய்.

ஹரி இயக்கி வரும் யானை திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு என நடிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர்  ஏற்கனவே வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், யானை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நியூஸ்7 சார்பாக நடிகர் அருண் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“நீங்கள் நடிக்கும் படத்தில் அதிகமாக புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. அதை தவிர்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா?” என்று நியூஸ் 7 செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் அருண் விஜய், “இனிவரும் காலங்களில் என்னுடைய படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்ப்பேன்” என்று அருண் விஜய் பதில் அளித்தார். யானை படத்திலும் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தைப் பார்த்த பிறகு, அதில் இடம்பெற்ற யஷ் கதாபாத்திரத்தை பார்த்து புகைப்பிடித்ததாகக் கூறிய ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுவன், புகைப்பிடித்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.