பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ட்ரான்ஸ்’.இத்திரைப்படம், ‘நிலை மறந்தவன்’எனும் பெயரில் தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ட்ரெயிலர் வெளியீட்டுடன் விருந்தினர்களுக்கு இப்படம் திரையிட்டும் காண்பிக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ‘இந்த திரைப்படம் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது அல்ல. மத வியாபாரிகளை வெளிச்சம் போட்டு காண்பிப்பதே இப்படம்’என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்தில் இருக்கலாம் என்று பலராலும் எதிர்ப்பார்க்க பட்டது. இதனைத்தொடர்ந்து, இப்படம் கடந்து வந்த பாதையில் பயணிக்க தொடங்கினோம்..
கேரளாவை சேர்ந்த வின்செண்ட் வடக்கன் என்பவர் கதை, திரைக்கதை எழுத இயக்குநர் அன்வர் ரஷீத் இப்படத்தை இயக்கியுள்ளார். 2017-ல் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு சர்ச்சைகளையும், தடங்கள்களையும் சந்தித்த இப்பட வெளியீடு, அடுத்தடுத்து தள்ளிப் போனது. இப்படத்தில் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அதனால் 17 நிமிடம் வரை காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலையில் காம்ப்ரமைஸ் கூடாது என முடிவெடுத்த இயக்குநர், மும்பைக்கு சென்று ரிவைஸிங் கமிட்டியில் படத்தை காட்டி தணிக்கை பெற்றார். இதையடுத்து 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படம் வெளியிடப்பட்டது. இத்துடன் ‘ப்ளாஷ்பேக்’முடிந்தது.
மேலும், இந்த நிகழ்வில் பீஸ்ட் திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, ‘பீஸ்ட் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. அதை பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படத்திற்கு நான் ப்ரமோஷன் செய்யமாட்டேன்’ என ‘கட் & ரைட்’ஆக கூறிவிட்டார். பீஸ்ட் போலவே சுமார் ரகம் என்று விமர்சிக்கப்பட்ட ‘மெர்சல்’ படம் எச்.ராஜாவின் கடுமையான எதிர்ப்பால் அபரிமிதமான ப்ரமோஷனுக்கு உள்ளானது என்பதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில், மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் பீஸ்ட் படத்தை அதேபோல் ஏதேனும் சம்பவங்கள் வந்து காப்பாற்றினால் தான் உண்டு என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த சிக்கலான நேரத்தில் எச்.ராஜாவும் ப்ரமோஷன் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டதால், விஜய் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வருகிறது.
மேலும்,‘ஜெய்பீம் திரைப்படத்தில் எப்படி காலண்டர் ஒரு குறியீடாக இருந்ததோ, அதேபோல ‘நிலை மறந்தவன்’படத்தில் சூர்யா ஜோதிகா என்ற கதாபாத்திரமும் ஒரு குறியீடுதான்’ என்றும் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் ஜெய்பீம் படத்திற்கு கண்டனமும் தெரிவித்தது போல, எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் கண்டனம் தெரிவிப்பீர்களா என்றும் சோசியல் மீடியா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.







