விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார் உதயநிதி.
இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு மெய்யநாதன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில், அவரது பெயருடன் இலாகா பெயரும் இடம்பெற்றுள்ளது.
அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, “அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாரிசு அரசியல் விமர்சனம் எனக்கு புதிது அல்ல. இளைஞரணிச் செயலாளர் ஆனபோதும், சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும் விமர்சனங்கள் வந்தன. இப்போதும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றிற்கு என்னுடைய செயல்பாடுகள் மூலமாக பதிலளிப்பேன்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றும் எண்ணம் உள்ளது, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மைதானம் அமைப்போம் என வாக்குறுதி அளித்துள்ளோம். அதுதொடர்பாக எனது முதல் பணி இருக்கும். அதுபோலவே விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும் என்று கூறிய அவர், “என் மீது குறை இருந்தால் கூறுங்கள். அதற்கு ஏற்றார் போல என்னுடைய பணிகளை அமைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
மேலும், எனது கடைசி படம் மாமன்னன் தான் என்றும், அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார்.







