அமைச்சர் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கீடு

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று…

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பதவியேற்கும் நிகழ்விற்கு செல்வதற்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அங்கிருந்து பதவியேற்பு விழா நடைபெறும் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா, கனிமொழி என குடும்பத்தினர் சகிதம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து சரியாக 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்று பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.