தனக்கு வழங்கப்பட்ட முதலமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை, எளியோருக்கு உதவி செய்ததன் மூலம் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக உருவெடுத்தார். தற்போதும் சினிமா பிரபலம் என்பதை தாண்டி, பலருக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு முதலமைச்சர் பதவிக்கான ஆஃபர் வந்ததாகவும், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். Humans of Bombay ஊடகத்திற்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசியிருந்ததாவது;
அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு, “எனக்கு முதலமைச்சர் பதவிக்கான ஆஃபர் வழங்கப்பட்டது. நான் மறுத்ததால், துணை முதலமைச்சராக வேண்டும் என்றார்கள். நாட்டிலுள்ள மிகப் பெரிய ஆட்கள் மாநிலங்களவையில் இடம் கொடுத்தார்கள். அரசியலில் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். இதுபோன்ற பெரிய நபர்கள், உங்களை அணுகி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஊக்குவிக்க விரும்புவது ஒரு உற்சாகமான நிலை” என்றார்.

தொடர்ந்து, சக்தி வாய்ந்த நபர்களைவிட மக்கள்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள் என தொகுப்பாளர் கூறியதற்கு,
அரசியலில் நுழைந்தால் தனது சுதந்திரத்தை இழக்க நேரிடும் எனக்கூறிய அவர், பொதுவாக இரண்டு விஷயங்களுக்காக மக்கள் அரசியலில் நுழைகிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காகவும், அதிகாரத்திற்காகவும். அதன் இரண்டு மீதும் எனக்கு மோகம் இல்லை. ஆனால், எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை. பொதுமக்களுக்கு உதவுவது என்றால், அதை நான் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறேன். அதை யாரிடமும் நான் கேட்க வேண்டியதில்லை. யாருக்காவது நான் உதவ விரும்பினால், நானே சொந்தமாகச் செய்வேன்” என தெரிவித்தார்.
மேலும் தான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல என்று கூறிய அவர், அரசியல்வாதிகளாகவும், சிறப்பாக பணியாற்றும் பல நண்பர்கள் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் மனமாற்றம் ஏற்படலாம் என்றும், அரசியலில் இணைந்து நாட்டுக்கு உதவ விரும்புவதாகவும், ஆனால் தற்போது அதற்கு தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.







