சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.. 1989-ல் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் – எடப்பாடி பழனிசாமி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிகழ்ந்த கொடுமையை முதலமைச்சர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிகழ்ந்த கொடுமையை முதலமைச்சர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள இடத்தினை எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன் மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர், மூத்த கட்சி நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த மாநாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டேன்.

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். திமுக எம்பி கனிமொழி அது தொடர்பாக சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசினார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன் என்கிற அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பேசும் போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பதில் அளிக்க ஜெயலலிதா முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது.

இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினர். மிக மோசமான அந்த நாளை சட்டப்பேரவையின் கருப்பு தினமாக பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் வேறு எந்த பெண் சட்டமன்ற உறுப்பினருக்கும் இதுவரை நடைபெற்றது இல்லை.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கண்ணெதிரே ஒரு பெண் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு அன்று என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து, 1991 தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினார்கள். அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன். அதன் மூலமாக உண்மை, தர்மம், நியாயம் வென்றது. இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். சமூக நீதியை காப்பதே அதிமுகதான் என்றும், சாதி சண்டை திமுக ஆட்சியில் தொடர்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.