பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது கனடா நாட்டின் குடியுரிமை தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா என்ற இயற்பெயர் கொண்ட அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடத்திலும் கவனத்தை பெற்றிருந்த இவர், அண்மையில் ‘ஒஎம்ஜி 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 55 வயதாகும் அக்ஷய் குமார் கடந்த 2000 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் அதிலும் குறிப்பாக இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான பல கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்த போதிலும், அவர் மீது ஒரு தரப்பினர் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் சுதந்திர தினமான இன்று இந்தியக் குடியுரிமையைப் தான் பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். அதில் தன்னை இந்திய குடிமகனாக அறிவிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படத்தை அவர் பதிவிட்டிருந்ததோடு, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்! எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2019-ல் இந்திய பாஸ்போர்ட் வேண்டி அக்ஷய் குமார் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் அவருக்கு காலதாமதமானது. தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ள தகவல் ரசிகர்கள் இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








