அமித்ஷா மீது தெரிவிக்க வேண்டிய புகாரை மாநில அரசு மீது கூறுவது வேடிக்கையானது என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறியதை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கி இருப்பதாக கூறினார்.
இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், “பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குற்றச்சாட்டை வைத்திருக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மாநில காவல்துறையின் அதிகாரத்தை வாங்கிக்கொள்வார்கள். சாதாரண ஐபிஎஸ் தேவையில்லை. சாதாரண மனிதருக்குக் கூட அது தெரியும்” என்று குறிப்பிட்டார்.
அமித்ஷாவிற்கும் அண்ணாமலைக்கும் சண்டையா என தெரியவில்லை என்று குறிப்பிட்ட டிகேஎஸ் இளங்கோவன், “அமித்ஷா மீது தெரிவிக்க வேண்டிய புகாரை மாநில அரசு மீது கூறுவது வேடிக்கையான, விநோதனமான ஒன்று. பாஜக ஆளாத மாநிலங்களில் குழப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள். அடிமைகளை ஆளுநர்களாக நியமித்து அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்காத போக்கு காணப்படுகின்றது. ஆளுநரை எப்படி மாற்றுவார்கள்? ஆளுநரை மாற்ற மாட்டார்கள். மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை ” என்று கூறினார்.







