அதிமுக சட்டவிதியை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர் என்றும், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு, மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 263 பேர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நாம் கடந்து வந்த பாதை எந்த குறிக்கோளை நோக்கி என்பதை விரிவாக முன்னோடிகள் பேசினார்கள். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முன்னோடிகள், தமிழ்நாட்டு அரசியலில் யாரும் வெல்ல முடியாத சக்தியாக இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். ஜெயலலிதா, தனக்கு வந்த சோதனைகள் அனைத்தையும் தாண்டி, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்தனர். தமிழ்நாட்டை அதிகமாக ஆண்ட கட்சி அதிமுக தான். நிகழ்ச்சி நிரல் எல்லாம் தயாரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுக்குழுவை தமிழ் மகன் உசேன் வழிநடத்தினார்.
இதையும் படியுங்கள் : விமான நிறுவனத்திற்கு ChatGPT எழுதிய மின்னஞ்சல் – நெட்டிசன்கள் வியப்பு!
அதன்பின் சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கு சென்று, எந்தவித முன்னறிவிப்பின்றி தீர்மானங்களை ரத்து செய்வதாக அறிவித்தனர். அதிமுக சட்டவிதியை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை தலைவணங்கி ஏற்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது. அது கூடிய விரைவில் வரும். நாம் தர்மம், நியாயத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் நாங்கள் பல்வேறு பொறுப்புகளை அனுபவித்துவிட்டோம்.
சாதாரண தொண்டனான நான் முதலமைச்சர் ஆனேன். எதற்கும் தயங்காமல் நில்லுங்கள். உங்களுக்கு முன்னால் நாங்கள் நிற்போம். இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம் என அறிவித்தோம். ஆனால் அதற்கான எந்த மரியாதையும் அவர் கொடுக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும். வேட்புமனுவை வாபஸ் பெற்று, இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. கொடூரமான புத்தியை வைத்துக்கொண்டு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆன்மா இந்த இயக்கத்தை காப்பாற்றும்” என்று தெரிவித்தார்.







