அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என சசிகலா கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சி அமைந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குறிப்பாக தலைநகரம் சென்னையில் கொலை, கொள்ளை மேலோங்கி விட்டது. இதற்கு காரணம் சென்னையில் மூன்று காவல் ஆணையங்களாக பிரித்தது தான். குற்றவாளிகள் ஓரிடத்தில் குற்றம் செய்துவிட்டு மற்றொரு இடத்தில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர், இதனால் தலைநகரத்தில் சட்ட ஒழுங்கை சமாளிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்னை அதிமுக கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் மட்டுமே கூறவேண்டும். சொந்தக் கட்சியினரே என்னை கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்பது திமுகவிற்கு உதவி செய்வது போலாகிவிடும். இதுபோன்று கட்சி பிரிந்து இருப்பதால் முழு நன்மை திமுகவிற்கு மட்டுமே. இதனால் அதிமுகவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
மேலும் அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்க வெகுநாட்கள் இல்லை. தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்படும் தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் தலைமையேற்றதும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நல்ல பதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.








