தனது கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் ‘நான் முதல்வன் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உதவித்தொகையும் வழங்கப்படுவதால், மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
அண்மையில் குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 பேர் தேர்வாகினர். இந்திய அளவில் 78வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் 2வது இடத்தையும் பிடித்த பிரசாந்த், தான் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதுவே தான் சாதிக்க உதவியது என்றும் நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் , தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இன்பா, குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்திய அளவில் 851-வது இடத்தை பிடித்த இன்பா, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்.
நான் முதல்வன் திட்டத்தை தனது கனவுத் திட்டம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், “என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்!” என்று பதிவிட்டுள்ளார்.
என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்! pic.twitter.com/Q8rre1QCtI
— M.K.Stalin (@mkstalin) May 3, 2024







