பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? -ஓபிஎஸ் சவால்

கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு இதை தெரிவிப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் கூறினார்.…

கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத
தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு இதை தெரிவிப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் கூறினார். மேலும் நான் பதவியை ராஜிநாமா செய்யத் தயார், எடப்பாடி பழனிசாமி தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக
ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. இந்தச் சூழலில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும்
மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நேற்று
சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக
நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 100-க்கும்
மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்-இன் பண்ணை வீட்டிற்கு வந்து
அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனை அடுத்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கவுரமான பொது குழுவில் சி.வி. சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது.

அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு. அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும். பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன்.

ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது. 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார்.

எடப்பாடி ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள்.  அதற்கு மக்களே முடிவு பண்ணட்டும் என்றார் ஓபிஎஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.